பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜின் கீட்கஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் இரவும் பகலுமாக ஆண்களும் பெண்களும் அடிக்கடி நடமாடி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த வீட்டில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நடப்பதாக அண்டை வீட்டார்கள் சந்தேகமடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். கதவை யாரும் திறக்காததால், போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு வெவ்வேறு அறைகளில் ஆட்செபனைக்குரிய வகையில் ஆண்களும் பெண்களும் இருப்பதை கண்டனர். இதையடுத்து அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததை கண்டுபிடித்த போலீசார், 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளி என்று கூறப்படும் சர்வேஷ் திவேதி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வசிக்க வேண்டும் என்று கூறி பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வீட்டை சர்வேஷ் திவேதி வாடகைக்கு கேட்டுள்ளார். அதன்படி அந்த அதிகாரியும் ரூ.15,000க்கு சர்வேஷுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ஆரம்பத்தில், சர்வேஷ் தனது குடும்பத்தினரை சில நாட்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார். அதன் பின்னர், அவர்களை தனது பழைய வீட்டிற்கு அனுப்பி அதன் பிறகு ஆண்கள், பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு பெண்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர், ஒருவர் வாரணாசியைச் சேர்ந்தவர், மேலும் இருவர் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட முக்கிய நபர் சர்வேஷ் உட்பட ஐந்து ஆண்களும் பிரயாக்ராஜில் வசிப்பவர்கள். குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/sax-2026-01-07-11-42-01.jpg)