கல்லூரி மாணவி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டையில் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு 4,000க்கும மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அந்த கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவி குறித்து அவதூறாகவும், ஆபாசமான கருத்துக்களும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பதிவினை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 16 அன்று புகார் அளித்திருந்தார். அதில், அப்போதைய தமிழ்த்துறை தலைவரும், தற்போதைய அக்கல்லூரி முதல்வராகவும் உள்ள சுமிதாவின் சமூக வலைத்தள கணக்கிலிருந்து, அந்த அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியவந்தது.

Advertisment

இந்த சம்பவத்தின் தீவிரத்தன்மையை அறிந்து, மாணவிக்கு ஆதரவாக டிசம்பர் 17ஆம் தேதி இந்திய வாலிபர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சமயத்தில், மாணவியின் புகார் குறித்த வழக்கில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 20 நாட்களாக நடந்த இந்த விசாரணையில், கல்லூரி முதல்வர் சுமிதாவும், அவரது கணவர் பொன்னுதுரையும் சேர்ந்து மாணவி குறித்து அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த சைபர் கிரைம் போலீசார், அவர்களிடம் சுமார் 8 மணி நேர விசாரணை நடத்தினர்.

பின்பு, மாணவி குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றத்திற்காக அவர்கள் மீது U/S 79 மற்றும் Ins 67 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், பிணையில் வெளி வரக்கூடிய அளவிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் தற்போது சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.முதல்வரின் கணவர் பொன்னுதுரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment