Feed manufacturing factory inaugurated by Minister MRK Panneerselvam Photograph: (mrk)
சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கால்நடைகளுக்கான குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலையில் திறந்துவைத்து, தீபாவளி சிறப்புப் பட்டாசு விற்பனையினையும் தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில், ''சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாக்களை எல்லையாக கொண்டு இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த சங்கத்தின் சொந்தமான உளுந்து பதனிடும் ஆலையில் இருந்து கிடைக்கப்பெறும் உப பொருளான உளுந்தம் தவிடு மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் பொருட்டு கூட்டுறவு பதனிடும் சங்கங்களில் பெறப்படும் உப பொருட்களை பயன்படுத்தி கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.19.53 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் உளுந்து தவிடு, மக்காச்சோளம், அரிசி தவிடு, கோதுமை தவிடு, சமையல் உப்பு, புண்ணாக்கு, வெல்லபாகு ஆகிய உப பொருட்களை கொண்டு தீவனம் தயாரிக்கப்படுகிறது.
50 கிலோ கால்நடை குச்சி தீவனம் தயாரிக்கும் ஆகும் செலவினம் ரூ.1100 ஆகும். கால்நடை குச்சி தீவனம் கிலோ ஒன்றின் விலை ரூ.25 என நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.3 வீதம் 50 கிலோ அளவிற்கு ரூ.150 லாபம் ஈட்ட இயலும். முன்பு அமைக்கப்பட்ட நவீன உளுந்து பதனிடும் ஆலை மூலம் தயாரிக்கப்படும் பருப்பு தமிழகத்தில் உள்ள இதர கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கும் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு கிடைக்கும் உப பொருள்களை கொண்டு அப்பளம், செக்கு நல்லெண்ணெய் மற்றும் செக்கு கடலை எண்ணெய் ஆகியவை பொதுமக்களுக்கு தரமான முறையில் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்களில் தரமான பட்டாசுகள் தனியார் நிறுவனங்களின் விலையைவிட மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் கூட்டுறவுச் சங்கங்களில் மூலம் விற்கப்படும் பட்டாசுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார். கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.இளஞ்செல்வி, துணைப் பதிவாளர் ரங்கநாதன்,கூட்டுறவுச் சங்க மேலாண்மை இயக்குனர் சிவகுருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.