ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டர் 57 நகரை சேர்ந்தவர்கள் தீபக் யாதவ் - மஞ்சு யாதவ் தம்பதியினர். இவர்களது மகள் 25 வயதான டென்னிஸ் வீரங்கனை ராதிகா யாதவ். டென்னிஸ் விளையாட்டில் முக்கியமான விராங்கனையாக அறியப்பட்ட ராதிகா யாதவ், பல மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை வென்றிருக்கிறார்.
இதனிடையே, ஒரு போட்டியின்போது ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. இதையடுத்து, டென்னிஸ் விளையாட்டிலிருந்து விலகிய ராதிகா, குருகிராமில் சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையத்தைத் தொடங்கி, பலருக்கு பயிற்சி அளித்து வந்தார்.
இந்நிலையில், ஜூலை 10 அன்று, காய்ச்சல் காரணமாக ராதிகா, பயிற்சி மையத்திற்குச் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அன்று அவரது தாய் மஞ்சு யாதவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு ஏதாவது ஸ்பெஷாலாக சமைத்துக் கொடுக்க விரும்பினார். அதற்காக, தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு சமையலறையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த தந்தை தீபக் யாதவ், தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் ராதிகாவை மூன்று முறை சுட்டுள்ளார். இதில், உடலில் குண்டுகள் பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். துப்பாக்கிச்சத்தம்கேட்டு கீழ் தளத்தில் இருந்து ஓடி வந்த தீபக் யாதவின் சகோதரர் குல்தீப் யாதவ், ராதிகாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, ராதிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீபக் யாதவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராதிகாவின் டென்னிஸ் பயிற்சி மையத்தின் வருமானத்தில் வாழ்வதாக கிராமவாசிகள் தீபக் யாதவை கேலி செய்து வந்தது தெரியவந்தது. மேலும், ராதிகாவின் நடவடிக்கைகள் குறித்து சிலர் தவறாகப் பேசியிருந்தனர். இதனால், தீபக் யாதவ், டென்னிஸ் பயிற்சி மையத்தை மூடுமாறு பலமுறை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், ராதிகா அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பயிற்சி மையத்தை நடத்தியதோடு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதனால், தீபக் யாதவ் தனது மகள் மீது கடும் கோபத்தில் இருந்தார். சம்பவத்தன்று, சமையலறையில் இருந்த ராதிகாவிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்தபோது, ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிராமவாசிகளின் கேலிகளும், சமூக ஊடகப் பதிவுகள் மீதான கோபமும், ஒரு தந்தையை தனது மகளைக் கொலை செய்யும் அளவிற்கு இந்தச் சமூகம் தள்ளியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.