தெலங்கானா மாநிலம், நாராயண்பேட்டை மாவட்டம், மரிகல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுமி, மக்தல் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி, அருகே உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சிறுமியை நாய் கடித்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜூலை 25 ஆன் தேதி அன்று சிறுமியின் தந்தை காலையில் ஆடு மேய்க்கச் சென்றிருக்கிறார். தாய் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். சிறுமி மட்டும் வீட்டில் தனியாகப் படித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், காலையில் ஆடு மேய்க்கச் சென்றிருந்த அவரது தந்தை அதிக அளவில் மது அருந்திவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் வந்த அவர், படித்துக் கொண்டிருந்த தனது 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

“நானா(அப்பா)... உங்கள கெஞ்சிக் கேக்றேன்.. என்ன எதும் செய்யாதீங்க..” என்று சிறுமி கதறியிருக்கிறார். ஆனால், கொடூரத் தந்தை அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். அந்தச் சமயத்தில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்துள்ளனர். இதனை அறிந்து சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியின் உடலில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு(க்ளினிக்) அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக மகபூப்நகர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலிசாரிடம், சிறுமியின் தாய் நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய சிறுமியின் தந்தையைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

வேலியே பயிரை மேய்ந்தது போன்று, தனது பெண் குழந்தையைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே குடிபோதையில் வன்கொடுமை செய்த சம்பவம் தெலங்கானா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.