தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் அருகே உள்ள கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த சிறுமி யார்? தவறுதலாக கால்வாயில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கால்வாயில் தள்ளிவிட்டு யாராவது கொலை செய்துள்ளனரா? என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, தெலுங்கான போலீசார் ஒருவர், சிறுமியின் புகைப்படத்தை தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனை பார்த்த மகாராஷ்டிரா போலீசார் சிறுமியை அடையாளம் கண்டுள்ளனர். அதில் சிறுமி மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை பாண்டுரங் கொண்டமங்கலே என்பதும் தெரியவந்தது. தெலுங்கானா போலீசார் உடனடியாக மகாராஷ்டிராவுக்கு சென்று சிறுமியின் தந்தை பாண்டுரங்கிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவரது முகத்தில் தனது மகள் உயிரிழந்ததற்கான சோகம் துளியும் இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாண்டுரங்கை விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாந்தேட் மாவட்டம் முகேத் தாலுகாவில் உள்ள கேரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங்வுக்கு, 6 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளும், 3 வயது ஒரு மகனும் என மூன்று குழந்தைகள். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் மகாராஷ்டிராவில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு பாண்டுரங் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து சட்டப்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்பதால், இது அவருக்கு பெரும் தடையாக இருந்துள்ளது.
இதனால் தேர்தலில் போட்டியிட தகுதியைப் பெறுவதற்காக, தனது 6 வயது மகள் ஒருவரை தத்துக் கொடுக்க முடிவெடுத்தார். ஆனால் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பாண்டுரங்கின் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால், தத்துக் கொடுப்பதிலும் சிக்கல் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தான் அரசியல் பதவி ஆசையில் 6 வயது மகளை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சிறுமியை தெலுங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்திற்கு கூட்டிச் சென்ற தந்தை பாண்டுரங், கால்வாயில் தள்ளி கொலை செய்துவிட்டு வீடு திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தந்தை பாண்டுரங்கை கைது செய்த போலீசார், அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சொந்த மகளின் உயிரையே பறித்த கொடூர தந்தையின் செயல் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/fathdau-2026-02-05-16-20-46.jpg)