பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞருடன் பழகியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா (17). உயர் சாதி எனும் சொல்லப்படும் ஷத்திரிய சமூகத்தைச் சேர்ந்த இவர், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். திவ்யாவின் இந்த பழக்கம், அவரின் குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை தூண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், திவ்யா காணாமல் போனதாக நேற்று முன்தினம் (27-09-25) போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, குன்வாரி ஆற்றில் திவ்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அறிந்த போலீசார், திவ்யாவின் உடலை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மின்விசிறியில் இருந்து மின்சாரம் தாக்கி இறந்ததாகவும், பின்னர் அது தற்கொலை என்றும் திவ்யாவின் குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதற்கிடையில், திவ்யாவின் இளைய சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் சம்பவம் நடந்த இரவு முதல் காணாமல் போயுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், திவ்யாவின் குடும்பத்தினரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பாக பழகியது பிடிக்காமல் போனதால் தனது சொந்த மகளையே, தந்தை பாரத் சிகார்வார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், திவ்யாவின் உடலை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஒரு கல்லில் கட்டி தங்கள் வீட்டிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள குன்வாரி ஆற்றில் வீசியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த விசாரணையின்படி, திவ்யாவின் உடலை தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். தடயவியல் அறிக்கைக்கு பின், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.