தாலிபான் பாணியில் மருமகனை மாமனார் ஒருவர் பெல்டால் ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் நகரில் உள்ள மசிலா கிராமத்தைச் சேர்ந்த முகமது யாமீன் என்ற நபரை, அவரது மாமனார் கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், உதவியற்ற நிலையில் தரையில் கிடந்த முகமது யாமீனை, அவரது மாமனார் பெல்ட்டை வைத்து அவரை கொடூரமாக தாக்குகிறார். மேலும், அவர் யாமீனின் தொண்டையில் தனது காலை வைத்து அழுத்துகிறார். இதில் வலி தாங்க முடியாமல் முகமது யாமீன் கதறி துடிக்கிறார். அடிப்பதை நிறுத்துமாறு யாமீன் கெஞ்சிய போது மாமனார் அவரை தாக்குகிறார். ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு இரண்டு பேர் வருகிறார்கள். ஒருவர், மாமனாரிடம் இருந்து பெல்ட்டைப் பறிக்க முயல்கிறார். ஆனால், அவர் தர மறுத்துவிட்டார். இரண்டாவது நபர், யாமீனை பலமுறை அடிக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மது போதைக்கு அடிமையான முகமது யாமீன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த அந்த பெண், கடந்த ஏப்ரல் தனது கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், முகமது யாமீன் செய்து வந்த சித்ரவதை குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், சம்பவ நடந்த தினத்தன்று தனது மனைவியை அழைத்து வர மாமனார் வீட்டிற்கு முகமது யாமீன் சென்றுள்ளார். அங்கு சென்ற போது, தனது மகளை சித்ரவதை செய்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, தாலிபான் பாணியில் மருமகனுக்கு தண்டனை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும், உயிருடன் இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.