யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் அங்குள்ள மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசு அவர்களது கோரிக்கையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 35 நாட்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வந்தார். அவருடன், லே தன்னாட்சிக் குழு உறுப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரின் உடல்நிலை 23-ம் தேதி அன்று மிகவும் மோசமானதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம், போராட்டக் குழு உறுப்பினர்களுடன் மத்திய அரசு அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என்று 24-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும், லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருக்கும் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, போராட்டம் தீவிரமடைந்தது. பா.ஜ.க. அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, தீ வைத்துக் கொளுத்தினர்.
நிலைமையைச் சமாளிக்க, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைப் போலீஸார் விரட்டியடித்தனர். இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, லடாக் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு பதற்றம் நிலவி வருவதால் தொடர்ந்து 5வது நாட்களாக ஊரடங்கு நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கார்கில் போரில் ஈடுபட்ட 46 வயதான ராணுவ வீரர் ஒருவர், லடாக் போராட்டத்தின் போது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் (46) என்பவர், கடந்த 1996 முதல் 2017 வரை ராணுவத்தின் சிறப்பு மலை காலாட்படை படைப்பிரிவான லடாக் ஸ்கவுட்ஸில் ஹவில்தாராக பணியாற்றினார். கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் ஒரு முக்கிய போரான டோலோலிங் போரில் அவர் பங்கேற்றார். அவரது தந்தை ஸ்டான்சின் நம்கியாலும், கார்கில் போரில் பங்கேற்று ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். அதன் பின்னர், தார்ச்சின் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று லடாக்கில் ஒரு ஆடைக் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற லடாக் போராட்டத்தில் தார்ச்சினும் மற்ற முன்னாள் ராணுவ வீரர்களுடன் பங்கேற்றார். அந்த போராட்டம் வன்முறையாக மாறியபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தார்ச்சின் முதுகில் ஒரு தோட்டா பாய்ந்து உயிரிழந்தார். லடாக் வன்முறையில் உயிரிழந்த 4 பேரில் தார்ச்சினும் ஒருவர் என்பதால் அவரது கிராமம் துக்கத்தில் மூழ்கியுள்ளது. தற்போது லேவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சோகச் சம்பவம் குறித்து தார்ச்சினின் தந்தை ஸ்டான்சின் நம்கியால் கூறுகையில், ‘என் மகன் ஒரு தேசபக்தர். அவன் கார்கில் போரில் போராடினான், மூன்று மாதங்கள் முன்னணியில் இருந்தான். டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன. கார்கில் போரின் போது நானும் என் மகனும் ஒன்றாகப் போரிட்டோம். நான் 3வது காலாட்படை பிரிவில் இருந்தபோது, ​​தார்ச்சின் லடாக் சாரணர் பிரிவில் இருந்தார். தார்ச்சின் சியாச்சினில் நான்கு முறை பணியாற்றியுள்ளார். எனது சேவைகளுக்காக ராணுவத் தலைமைத் தளபதியிடமிருந்து பாராட்டு அட்டையைப் பெற்றுள்ளேன். ராணுவத்தில் சேருவது எங்கள் இரத்தத்தில் ஊறியது. தார்ச்சினின் குழந்தைகள் கூட ராணுவப் பள்ளியில் படிக்கிறார்கள், அவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அவர் விரும்பினார். அரசாங்கம் தனது தேசபக்தர்களை இப்படித்தான் நடத்துகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.