வரதட்சணை பெற மனைவிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, தனது 8 மாத மகனை நபர் ஒருவர் கிராமத் தெருக்களில் தலைக்கீழாக ஊர்வலமாக தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023இல் சுமன் என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே, சஞ்சு தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வரதட்சணை பெற தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது 8 மாத குழந்தையை தலைக்கீழாக கிராமம் முழுவதும் சஞ்சு தூக்கிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, சஞ்சு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சுமன் கூறுகையில், ‘எனது திருமணம் 2023இல் நடைபெற்றது. நாங்கள் அங்கு சென்ற போது, என் மைத்துனர், மூத்த மைத்துனர் என எல்லோரும் என்னை அடித்தார்கள். ரூ.2 லட்சமும் காரும் கொண்டு வர வேண்டும் என்று கூறி ஒவ்வொரு முறையில் அவர்கள் என்னை அடித்தார்கள். எனக்கு ஒரு சின்னக் குழந்தை இருக்கு, வெறும் 8 மாசமே ஆகுது, யாரும் என் பேச்சைக் கேட்கல. இப்போ நான் முன்னேறணும்னு ஆசைப்படுறேன். அவங்க வரதட்சணை கேட்டாங்க, இப்போ என் குழந்தையை கிராமம் முழுக்க ஊர்வலமா கூட்டிட்டு போயி, தலைகீழா தொங்க விட்டாங்க. அவர் கிராம மக்களிடம், வீடியோ எடுன்னு சொல்லிருக்கிறார். பணம் கொடுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்கிட்ட பணம் இல்ல, எங்கிருந்து கொண்டு வருவேன்? அப்புறம் என்னை அடிச்சுக்கிட்டே குழந்தையைத் தலைக்கீழாக தொங்கவிட்டுருக்காரு. கிராமத்துல நாலு தடவை சுற்றினாரு. அந்தக் குழந்தை இப்போ உடம்பு சரியில்லாம போயிடுச்சு, இடுப்பு மூட்டு சிதைஞ்சு போச்சு. நாங்க அவனுக்கு சிகிச்சை கொடுக்கிறோம். நான் ஏழை, நான் என்ன செய்ய முடியும்? போலீஸ் என் பேச்சைக் கேட்கல. அவங்க குடும்பத்துல எல்லாரும் சிறையில் அடைக்கப்படணும்னு நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்.