சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற மகளையே ஆணவக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி, இனாம் வீரப்புரைச் சேர்ந்தவர் விவேகானந்தா தொட்டமணி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கு, கல்லூரியில் படிக்கும் போது மான்யா பாட்டில் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்களின் காதல் விவகாரம் மான்யா பாட்டிலின் குடும்பத்தினருக்கு தெரியவர, வேறு வேறு சாதி என்பதால் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இருப்பினும் இவர்கள் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மே மாதம், இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டர்னர். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வரலாம் என்று அச்சத்தில் இளம் தம்பதியினர், ஹாவேரி மாவட்டத்தில் வசித்து வந்தனர். இதற்கிடையில், மான்யா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விவேகானந்தாவின் வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். இதனையறிந்த மான்யாவின் தந்தையும் அவரது இரு உறவினர்களும், நேற்று இரும்பு பைப்களை எடுத்துக் கொண்டு விவேகானந்தாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன் பிற்கு, விவேகானந்தாவை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 6 மாத கர்ப்பிணியாக இருந்த மான்யாவையும் அவர்கள் தாக்குதல் நடத்தியதால், அவர்களை தடுக்க வந்த விவேகானந்தாவின் பெற்றோரையும் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

கடும் தாக்குதலுக்குள்ளான விவேகானந்தா, மான்யா மற்றும் விவேகானந்தாவின் பெற்றோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மான்யா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகளையே ஆணவக் கொலை செய்த மான்யாவின் தந்தை வீரனகவுடா பாட்டில் மற்றும் உறவினர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.