'Father attack his own daughter' - Shocking background Photograph: (chennai)
தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் கணவனால் ஆபத்து இருப்பதாக சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் கணவன் குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் ரெபேக்கா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்டெபி என்ற பெண் குழந்தை உள்ளார். இந்தநிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்த ரெபேக்கா தன்னுடைய தாய் வீட்டில் தங்கி தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். சிறுமி ஸ்டெபியை சதீஷ் முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் தன்னுடைய குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என தாய் ரெபேக்கா கேட்டு வந்துள்ளார்.
ரெபேக்கா குழந்தையை கேட்கும் போதெல்லாம் சதீஷ் அவரை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையை கேட்டால் குழந்தையை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று ஓட்டேரி காவல் நிலையத்தில் ரெபேக்கா புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து தன்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியதாகவும், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்ட பொழுது குழந்தையை கேட்டால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து நேற்று காலை தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்த சதீஷ் ரெபேக்காவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் விசாரணைக்கு வருமாறு சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சதீஷ்குமார் அவருடைய சகோதரியை செல்போனில் அழைத்து தன்னுடைய குழந்தையை கொலை செய்து விட்டேன் கூறிவிட்டு தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தாய் தந்தை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட மோதலில் தன்னுடைய மகளை தந்தையே கொன்ற இந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.