சொந்த மகளையே தந்தை ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி குழந்தையை பெற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறப்பு ரயிலில் கடந்த ஜூன் 22ஆம் தேதி மர்மமான பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை சோதனையிட்ட போலீசார், புதிதாக பிறந்த ஆண் குழந்தையை கிடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த பைக்குள் சிம் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அந்த சிம் யார் பெயரில் உள்ளது? இந்த குழந்தை யாருடையது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பீகாரில் தயாரிக்கப்பட்ட அந்த சிம்மின் உரிமையாளரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. மொரதாபாத்தைச் சேர்ந்த ஒரு நபர், தனது மைனர் மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர், அந்த நபர் செய்த குற்றத்தை மறைத்து சிகிச்சைக்காக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, மொரதாபாத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். ரயில் வாரணாசி சென்று கொண்டிருந்த போது சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயில் கழிவறையில் சிறுமிக்கு பிரசவம் பார்த்ததில், ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதன் பின்னர், ஒரு பைக்குள் குழந்தையை மறைத்து வைத்து மற்றொரு ரயிலில் தூக்கிப் போட்டு சிறுமியும், அவரது குடும்பத்தினரும் ரயிலை விட்டு இறங்கி வந்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் சிம்மையும் அந்த பைக்குள்ளேயே விட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தையை தன்னால் வைத்திருக்க முடியாது என்று எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளித்தார். இருப்பினும், குழந்தை உடனடியாக தத்தெடுக்கப்படாது, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த செயல்முறை தொடங்கும், அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி மறுபரிசீலனை செய்து குழந்தையை கோரலாம் என்று கூறப்பட்டுள்ளது.