தூத்துக்குடி மாவட்டம், லிங்கம்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் 25 வயதான தர்மதுரை. கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த புகாரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தர்மதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த பின்னர், இவர் சில மாதங்களாக வெளியூரில் தங்கியிருந்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான லிங்கம்பட்டிக்குத் திரும்பிய தர்மதுரை, ஜூலை 21 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை காவலர்கள் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நாலாட்டின்புதூர் காவல் நிலையக் போலீசார், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், தர்மதுரை மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையை வேறு கோணத்தில் தீவிரப்படுத்தினர். தர்மதுரையின் தந்தை மருதுபாண்டி மீது சந்தேகம் ஏற்பட்டதால், தனிப்படை போலீசார் அவரை அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், போதைக்கு அடிமையான மகனை தந்தையே தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மருதுபாண்டி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “எனது மகன் தர்மதுரை, கஞ்சா மற்றும் மது போதையில் அப்பகுதி மக்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தான். ஜூலை 21 ஆம் தேதி இரவு, லிங்கம்பட்டி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் கஞ்சா போதையில் தகராறு செய்துவிட்டு, சட்டை முழுவதும் ரத்தக் கறையுடன் வீட்டுக்கு வந்தான். பின்னர், வீட்டில் இருந்த தாய் அமுதா மற்றும் இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் இருந்த சகோதரி நாச்சியார் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டி ரகளை செய்தான். அவர்கள் பணம் தர மறுத்தபோது, அவர்களைத் தாக்கினான். அப்போது, தாய் அமுதா எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். வெளியே சென்றிருந்த நான் வீட்டுக்கு வந்து, கஞ்சா போதையில் இருந்த மகனைக் கண்டித்தேன். இதனால் வாக்குவாதம் முற்றியது. தர்மதுரை, தாய் மற்றும் தந்தை இருவருடனும் மல்லுக்கட்டி, எங்களைக் கீழே தள்ளி, இரும்புக் கம்பியால் குத்த முயன்றான். அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம். அப்போது, ‘உங்கள் இருவரையும் நாளைக்குள் முடித்துவிடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்தான். இதனால், வீட்டில் இருந்த நாங்கள் அனைவரும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். பின்னர், சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, நடு வீட்டில் கஞ்சா போதையில் ஆழ்ந்த தூக்கத்தில் தர்மதுரை கிறங்கிக் கிடந்தான். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நான், தர்மதுரையின் முகத்தில் தலையணையை அமுக்கினேன். இதில் அவன் உயிரிழந்துவிட்டான்.
பின்னர், 108 ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி செய்து, மகன் போதையில் மயங்கிக் கிடப்பதாகத் தகவல் தெரிவித்தேன். ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டுக்கு வந்தபோது, அதிலிருந்த ஊழியர்கள் தர்மதுரையைப் பரிசோதித்து, அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்து, காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்,” என்று கூறியுள்ளார். இதையடுத்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, போதைக்கு அடிமையான மகனை தலையணையால் அமுக்கி கொலை செய்த தந்தை மருதுபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா போதைக்கு அடிமையாகி, கலவரத்தில் ஈடுபட்டு வந்த சொந்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி