உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அம்பேஹ்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜுல்ஃபாம்(Julfam). இவருக்கு 17 வயதில் முஸ்கான் என்ற மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில், முஸ்கான் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் முஸ்கானுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் வளர்ந்துள்ளது. அதன் காரணமாக, முஸ்கான் தனது காதலனுடன் செல்போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் தந்தை ஜுல்ஃபாமுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த அவர், தனது மகளை அழைத்து, “காதல் எல்லாம் நமக்கு வேண்டாம், அவனை மறந்துவிடு” என்று கண்டித்துள்ளார். அதே சமயம், அவரது 15 வயது சகோதரனும் முஸ்கானை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், முஸ்கான் காதலை கைவிட மறுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது காதலனுக்கு தொலைபேசி மூலம் பேசுவதைத் தொடர்ந்து வந்துள்ளார். அந்த வகையில், செப்டம்பர் 27 அன்று மாலை முஸ்கான் தனது காதலனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

Advertisment

இது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. கண்டித்தும் முஸ்கான் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் பேசியது அவரது தந்தை மற்றும் சகோதரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதாக நினைத்து, ஜுல்ஃபாம் தனது மகளையே கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி, தனது மகனுடன் சேர்ந்து பேசிய ஜுல்ஃபாம், செப்டம்பர் 28 அன்று மாலை முஸ்கானை வீட்டின்  மாடியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு சென்றதும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, “எவ்வளவு சொன்னாலும் நீ காதலை கைவிட மாட்டில்ல” என்று கூறி, நொடிப்பொழுதில் முஸ்கானை நோக்கி ஜுல்ஃபாம் சுட்டுள்ளார். இதில், உடலில் குண்டு பாய்ந்து, முஸ்கான் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முஸ்கானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முஸ்கானின் தந்தை ஜுல்ஃபாம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது 15 வயது மகனையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாகப் பேசிய ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) என்.பி. சிங், “முஸ்கான் தனது தந்தை ஜுல்ஃபாம் மற்றும் 15 வயது சிறு வயது சகோதரனால் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் முஸ்கான் காதலித்ததால், அவரைக் கொலை செய்ததாக ஜுல்ஃபாம் ஒப்புக்கொண்டுள்ளார்,” என்று தெரிவித்தார்.

காதலை கைவிட மறுத்த மகளை பெற்ற தந்தையே ஆணவ கொலைச் செய்திருப்பது அந்த பகுதியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.