நாமக்கல்லில் கடன் பிரச்சனை காரணமாக மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). இவர் வீடு கட்ட 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜுக்கு கடன் தொல்லை அதிகரித்ததுடன், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் பிரக்திஷா ஸ்ரீ (வயது 9), ரித்திகா ஸ்ரீ (வயது 7) மற்றும் தேவஸ்ரீ (வயது 3) ஆகிய 3 பெண் குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதோடு கோவிந்தராஜும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அதே சமயம் அவரது மனைவி பாரதி மற்றும் மகன் அக்னீஸ்வரனை அறையில் பூட்டி வைத்துவிட்டு இந்த கொடூரச் செயலில் கோவிர்ந்தராஜ் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 மகள்களை வெட்டி கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட இந்த சம்பவம் ராசிபுரம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/05/a4675-2025-08-05-19-27-22.jpg)
காலையிலிருந்து பரபரப்பு ஏற்படுத்தி வந்த இந்த சம்பவத்தில் தற்போது திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கோவிந்தராஜின் உறவினர்கள் தற்பொழுது மங்களபுரம் காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். '3 குழந்தைகளை அவர் கொல்லவில்லை. அவருடைய கைகளிலும் சட்டைகளிலும் ரத்தம் படியவில்லை. எனவே இது கோவிந்தராஜுக்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கும். இதனைக் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்' என ராசிபுரம் காவல் துணை ஆய்வாளர் விஜயகுமாரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் கோவிந்தராஜனுக்கு இரண்டரை கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள நிலம் இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனார். காவல் நிலையத்திற்கு முன்பாகவே கோவிந்தராஜின் உறவினர்களும் மனைவி பாரதியின் உறவினர்களும் மாறி மாறி குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்த இருப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் களைந்து சென்றனர்.