Advertisment

கடலில் கரைந்த விதி; கப்பலில் சமாதியான தொழிலாளர்கள்!

R1

கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான விதி மீறலால் 3 அப்பாவிக் கப்பல் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி துடிக்கத்துடிக்க பலியானது தூத்துக்குடி துறைமுக நகரை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

Advertisment

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு கருங்கற்கள், ஜல்லிக்கற்கள் மற்றும் குண்டுக் கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் தோணிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இவைகள் சுமார் 4500 டன் அளவு குண்டு கற்கள் பெரிய பார்ஜர்கள் எனப்படும் ராட்சத இரும்பு மிதவைக் கப்பலில் ஏற்றப்பட்டு மாலத் தீவிற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இந்த பார்ஜர்கள் தூத்துக்குடியிலுள்ள  தனியார் நிறுவனங்களான ஷிப்பிங் நிறுவனம் மூலம் இயக்கப்படுகின்றன. இங்குள்ள மோகன் முத்தா என்கிற ஷிப்பிங் நிறுவனம் மூலமாக கருங்கற்கள் ஏற்றுவதற்காக நேற்று காலை ஒரு பார்ஜர் தயாராக இருந்தது. அந்தப் பார்ஜரின் கீழ் பகுதியில் அமைந்திருக்கிற இரு சமகலன்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்திருக்கிறது. அதனை அகற்றி சுத்தப்படுத்துவதற்காக செப். 17 அன்று காலை அந்த நிறுவனத்தின் கப்பல் ஊழியர்கள் சமகலத்தின் டேங்கின் மூடியை திறந்து வைத்துள்ளனர். பின்பு அந்த டேங்கில் சிறிய நுழைவு வாயில் வழியாக சுத்தம் செய்வதற்காக அந்த பார்ஜரின் தொழிலாளியான சரோன் ஜார்ஜ் என்பவர் இறங்கியுள்ளார்.

இறங்கிய அவர் நெடுநேரமாகியும் வெளியே வராமல் போகவே அவர் என்ன ஆனார் என்று பார்ப்பதர்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் என்ற மற்றொரு தொழிலாளி டேங்கிற்குள் இறங்கியுள்ளார். இறங்கிய அவரும் வெளியே வரவில்லை. இதையடுத்து புன்னக்காயலைச் சேர்ந்த ஜெனிஸ்டன் தாமஸ் என்கிற தொழிலாளி இறங்கியிருக்கிறார். வெகுநேரமாகியும் இந்த மூன்று தொழிலாளிகளும் வெளியே வராததால் பதற்றத்தில் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் தீயணைப்புத் துறை காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர், மத்திய பாகம் போலீசார், டவுண் ஏ.எஸ்.பி. மதன், மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் விரைந்து வந்திருக்கிறார்கள்.

333

Advertisment

பார்ஜரை ஆய்வு செய்த தீயணைப்பு அதிகாரிகள் அந்த டேங்கினுள் செல்லும் மூடியானது சிறிய அளவில் இருந்ததால் மீட்பு பணி சவாலானது. அதையடுத்து வெல்டிங் மெஷின் மூலம் மூடிகளை வெட்டியெடுத்து அதன் வாயிலை பெரிதாக்கிய பின்பு பெரிய ஏணிகள் மூலமாக உள்ளே சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரப் போராட்டத்திற்கு பின்பு தொழிலாளிகள் மூன்று பேரையும் அடுத்தடுத்து மீட்டு வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள். பேச்சு மூச்சில்லாமல் விறைத்துக் கிடந்த அந்த 3 பேரும் பிணமாகவே கிடந்தது அத்தனை பேரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

கடும் போராட்டத்திற்கு பின்பு மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட அந்த 3 தொழிலாளிகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த டேங்கிற்குள் இருப்பவைகளை சுத்தப்படுத்துவதற்காக இறங்கிய தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதால் இறந்திருக்கலாம் அல்லது அதில் நிறைந்திருந்த தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கக் கூடுமா என விசாரணையைக் கிளப்பியிருக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

மேம்போக்காகப் பார்த்தாலும் மூன்று தொழிலாளர்களும் விஷவாயு தாக்கப்பட்டதால் பரிதாபமாக மரணமடைந்தார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டாலும் துறைமுகத்திலுள்ள அனுபவம் வாய்ந்த சிலர் இந்த சம்பவத்தில் பார்ஜர் மிதவைக் கப்பல் நிர்வாகம் விதியை மீறியதும் அலட்சியமுமே காரணம் என்கிறார்கள்.இதுகுறித்து நாம் துறைமுகத்திலுள்ள முக்கியமான அதிகாரி ஒருவரிடம் பேசியபோது தன் அடையாளம் வேண்டாம் என்றவர்,

வாரத்திற்கு இதுபோன்ற 10 பார்ஜர் மிதவைக் கப்பல்கள் மூலம் தலா 4500க்கும் மேற்பட்ட டன்கள் எடை கொண்ட கட்டுமானக் கற்கள் மாலத்தீவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த மிதவைக் கப்பலின் மிஷின்கள் என்ஜின்கள் இயங்குவதற்கு அன்றாடம் ஆயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி பயன்படுத்துகிறபோது அதன் கழிவுகள் கப்பலின் கீழ் பகுதியான சமகலன்களில் வந்து சேரும். அதோடு அந்த பார்ஜரின் தண்ணீர் உள்ளிட்ட பிற கழிவுகளும் அங்குதான் வந்து அடைகின்றன. இப்படி மொத்தமாகச் சேரும் இந்தக் கழிவுகள் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும். அதை எப்போதாவதுதான் சுத்தம் செய்வார்கள். அப்படித் தேங்கிய கழிவுகள் மொத்தமாகத் தேங்கிக் கிடப்பதால் அவைகள் கேலிபிரேஷனுக்குப் பின்பு ரசாயன மாற்றமாகி விஷத்தன்மை கொண்டதாக உருமாறி விடும். அத்துடன் அது விஷ வாயுவாகவும் உருவெடுத்து மொத்த டேங்கிலும் பரவியிருக்கும். கடல்சார் விதிகளான கடல் பொருளாதாரக் கொள்கைச் சட்டப்படி இதுபோன்ற விஷக் கழிவுகளை கடலில் கொட்டக்கூடாது. அப்படிக் கொட்டினால் கடல்வாழ் உயிரினங்கள் அழிய நேரிடும் என்பதால் இதுபோன்ற கழிவுகளைக் கொண்ட பார்ஜர்களை ஏதாவது ஒரு துறைமுகத்தில் நிறுத்தி, அதற்குத் தகவல்கொடுத்து துறைமுகத்தின் ஒப்புதலோடு நிர்வாகம் பணியாளர்களைக் கொண்டுதான் இவைகளை முறைப்படி சுத்தப்படுத்தவேண்டும் என்பது விதி.

அப்படி சுத்தப்படுத்துவதற்கு முன்பாக துப்புறவுப் பணியாளர்கள் டேங்கின் மூடியை ஒரு நாள் முழுக்கத் திறந்து வைத்திருப்பார்கள். அதன்மூலம் டேங்கினுள் உள்ள விஷவாயுக்கள் வெளியேறிவிடும். அதன் பிறகு மறுநாள் தான் பணியாளர்கள் உள்ளே இறங்கி டேங்கினை சுத்தம் செய்வார்கள். இப்படித் தான் சமகலன்களின் டேங்குகள் கேலிபிரேஷன் செய்யப்பட்டு வந்துள்ளன.
ஆனால் தொடர்புடைய அந்த பார்ஜரின் நிறுவனம் சுத்தம் செய்யப்படுவதை தூத்துக்குடி துறைமுக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவில்லை. ஒப்புதலும் பெறவில்லை. மேலும் சமகலன்களின் மூடியை திறந்த ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்கள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக டேங்கினுள் இருந்த விஷயவாயு தாக்கப்பட்டு அடுத்தடுத்து மூன்று தொழிலாளர்களும் பரிதாபமாக மரணமடைந்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல். இதுபோன்ற பயங்கரங்கள் நடந்ததில்லை என அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் அந்த அதிகாரி.அலட்சியமும் விதிமீறலும் அப்பாவித் தொழிலாளர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது.

 

gas ship Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe