கடலூரில் விவசாய நிலத்திற்குச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம். இன்று தன்னுடைய விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று வழக்கம்போல வயலுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்சார கம்பி விளை நிலத்தில் அறுந்து கிடந்துள்ளது. அதனைத் தெரியாமல் மிதித்த செல்வம், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அங்கு வந்த காவல்துறையினர் செல்வத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மின்வாரியத்தின் அலட்சியத்தினால் தான் இந்த விபத்து நடந்துள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் செல்வத்தின் உறவினர்கள், அந்தப் பகுதி மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, உயிரிழந்த செல்வத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.