Farmers protest over threatening new seed law Photograph: (farmers)
மத்திய வேளாண் அமைச்சகம் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி 'விதைகள் சட்டம்-2025' வரைவை வெளியிட்டிருந்தது. அது தொடர்பாக வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்தைக் கோரியுள்ளது. விதைகள் விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த இந்த புதிய சட்டம் வழிவகுக்கும் என அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம் அந்த வரைவு மசோதாவில் வெளிநாடுகளில் உள்ள பல புதிய பயிர் ரகங்களின் விதைகளை இறக்குமதி செய்து கொள்வதற்கு ஏதுவாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற அம்சம் விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. இது விதைகள் வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
இன்றைய சூழலில் அவ்வப்போது விதைத் தட்டுப்பாடு நிலவுவது உண்டு. பழங்கால முறையில் விதைகளை வீடுகளில் பாதுகாத்து வைத்துப் பயன்படுத்தும் விவசாயிகள் மிகவும் குறைவு. எனவே விதை விற்பனை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் பிடிக்கு சென்றால் செயற்கையான தட்டுப்பாடும் அதன் மூலம் ஏற்படும் விலையேற்றமும் என விவசாயிகளை பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மின் திருத்த மற்றும் புதிய விதை சட்டத்தினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பச்சை தென்னங்கீற்றில் வைத்து இறந்தவரின் சடலத்தை தூக்கிச் செல்லும் பாடை கட்டி அதில் மின் மீட்டரை வைத்து இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கு செய்தனர்.
மேலும் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த சட்ட நகலைத் தீயிட்டு எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க மண்டல தலைவர் அத்திப்பட்டு சரவணன் ,பேரூர் குஞ்சிதபாதம், அறிவழகன், அண்ணாதுரை, மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Follow Us