தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வரத்து வாரிகள் சரியாக இருந்த நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்புகளாலும், மராமத்து இல்லாததாலும் வரத்துவாரிகள் இல்லாத நீர்நிலைகள் இன்னும் தண்ணீர் இன்றி வறண்டு தான் காணப்படுகிறது. இதே நிலை தான், புதுக்கோட்டை மாவட்டத்திலும் 50% நீர்நிலைகள் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
இந்த நிலையில் தான், விவசாயிகள் ஒரு காட்டாற்றில் கடலுக்குச் செல்லும் மழைத் தண்ணீரை ஆற்றுக்குள் செல்வதற்கு மண்ணால் தடுப்பு அமைத்து மோட்டார் வைத்து இறைத்து பெரிய ஏரியில் நிரப்பி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தில் வராத அம்புலி ஆறு காட்டாற்றில், மழைக்காலங்களில் செல்லும் தண்ணீரை ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று பல வருடங்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் நீர்வளத்துறை மூலம் தடுப்பணைகள் அமைக்காததால் காட்டாறே ஆக்கிரமிப்புகளால் குறைந்து போனது. அதனால் கீரமங்கலம் வடக்கு, நகரம், மாங்காடு ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் மண்ணை கொட்டி காட்டாற்றுக்குள் தடுப்பு ஏற்படுத்தி கல்லாகுளம் ஏரி, கடியாகுளம் ஏரி ஆகிய இரு ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு போக முயன்றனர். ஆனால் மழைத் தண்ணீர் குறைவாக வந்ததால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/la-2025-12-05-19-28-23.jpg)
இந்நிலையில் தான், கடந்த வாரம் கல்லாகுளம் ஏரிக்குச் செல்லும் வாரியை சொந்த செலவில் தூர் வாரிய இளைஞர்கள், மழை பெய்து தண்ணீர் வரத் தொடங்கியதும் தற்காலிக மண் தடுப்பணையில் தேங்கிய தண்ணீரை குளத்தில் நிரப்ப முடிவு செய்தனர். அதன்படி, ஒரு டிராக்டரில் பம்புகள் தயார் செய்து வைத்து தண்ணீரை டிராக்டர் பம்புகள் மூலம் இரைத்து வரத்து வாரி மூலம் கல்லாகுளத்திற்கு தண்ணீரை கொண்டு போய் நிரைத்து வருகின்றனர். தண்ணீரே இல்லாமல் கிடந்த கல்லாகுளம் ஏரியில் கடந்த 5 நாட்களில் டிராக்டர் மூலம் இரைத்த தண்ணீர், ஏரியில் பாதி அளவிற்கு நிரம்பியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து காட்டாற்றில் தண்ணீர் வந்தால் ஏரிகளை நிரப்பிவிடாலம் என்று கூறும் இளைஞர்கள் நீர்வளத்துறை மூலம் தடுப்பணைகள் கட்டித்தர கோரிக்கையும் விடுத்துள்ளனர். ஏரியில் தண்ணீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் மேலே வந்துவிடும். கோடை காலங்களில் ஆடு மாடுகளுக்கு தாகம் தனிக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் 50 லிட்டர் டீசல் செலவாகிறது. இதற்கு இதுவரை சிலர் உதவி செய்துள்ளனர் என்றனர். கீரமங்கலம் பகுதி இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/lak-2025-12-05-19-27-02.jpg)