Farmers' Association accuses PM of reciting Satanic verses at organic farming conference
சிதம்பரத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டதிற்கு கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் மாவட்ட தலைவர் தமிழ்வாணன், மாவட்டச் செயலாளர் செல்வக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள்முருகன், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதரம் குறித்து பேசினார்கள்.
இதனை தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் கே.வீ இளங்கீரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவைக்கு பிரதமர் மோடி வருகை தந்து இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஏதோ விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக ஒரு போலியான நாடகத்தை நடத்தியுள்ளார். ஏனென்றால் அவர் முதன் முதலில் 2014இல் ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயி உடைய வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் கூறி இந்திய விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். விவசாயி மற்றும் விவசாயத்திற்கு எதிராக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தனர்.
இதனை எதிர்த்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 740 விவசாயிகளுடைய உயிரை பறித்து வேறு வழி இல்லாமல் அந்த 3வேளாண் சட்டத்தையும் திரும்ப பெற்றுக் கொண்டார். இதை நன்கு தெரிந்த பி.ஆர் பாண்டியன் பிரதமருக்கு ஆதரவாக இந்திய விவசாயிகளை அடமானம் வைக்கலாமா? மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அனுமதி வழங்கி விட்டு ஏதோ விவசாயிகளுக்கு நன்மை செய்தவர் போல சாத்தான் வேதம் ஓதியது போல இருக்கிறது. இவர் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டது இந்திய விவசாயிகள் இந்த மோடி ஆட்சிக்கும் மோடிக்கும் எதிராகவும் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தனக்கு ஆதரவாக விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகத்துக்கு காட்டுவதற்காக விவசாயிகள் என்ற போர்வையில் பி.ஆர். பாண்டியன் அதற்கு துணை போவது இந்திய விவசாயிகளுக்கு செய்யும் பெரும் துரோகம்.
இதுபோன்ற ஒரு மாநாட்டை வட இந்தியாவில் நடத்த முடியாது என்பதால் தமிழகத்தில் போலி விவசாயி பாண்டியனை வைத்து மாநாட்டை நடத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதில் உண்மையான இயற்கை விவசாயிகள் பங்கு பெறவில்லை. செயற்கையான விவசாயிகளே பெரும் அளவிற்கு கலந்துகொண்டனர். இது இயற்கை விவசாயிகள் மாநாடா, செயற்கை விவசாயிகள் மாநாடா என தெரியாமல் மோடி போலி நாடகத்தை நடத்தியுள்ளார்.கடலூர் மாவட்டம் குடிகாடு, தியாகவல்லி உள்ளிட்ட கிராமங்களில் நெல், மணிலா, வாழை, வெட்டிவேர், தென்னை உள்ளிட்ட பொன் விளையும் பூமி 1000 ஏக்கரை கையகப்படுத்தி அரசு தொழில் பூங்கா அமைக்க போவதாக அறிவித்துள்ளது. தொழில் பூங்காவுக்கு விளைநிலம் கையகப்படுத்தினால் அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
Follow Us