தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் விவசாயி நல்லசாமி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியின் மகன் 25 வயதான வெங்கட சுப்பிரமணியன் பொறியியல் மற்றும் மனித வள மேலாண்மை படித்து முடித்துள்ளார். மலையேற்ற வீரரான வெங்கட சுப்ரமணியன் நல்லசாமி கடந்த 16 ஆம் தேதி ஆப்பிரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரத்தில் 5 ஆயிரத்து 835 மீட்டர் உயரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஐரோப்பா கண்டத்தில் மவுன்ட் எல்ப்ரோஷ் சிகரம், தென் அமெரிக்கா கண்டத்தில் அக்கோனா காக்குவா சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். மலையின் உச்சியில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேனரை கையில் பிடித்தபடி மரியாதை செலுத்தினார்.
கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டு விட்டு வீடு திரும்பிய வெங்கட சுப்ரமணியன் நல்லசாமி தனது மலையேற்ற பயணம் குறித்து நம்மிடம் பேசுகையில், “நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ராம்கோ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு டீக்கடையில் தற்செயலாக டிவி பார்த்த போது அதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி, 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்கிற செய்தியை பார்த்தேன். அப்போதுதான் என் மனதில் நம்முடைய கால்களும் உலகின் உயரமான மலைகளை தொட வேண்டும் என்கிற ஒரு எண்ணம் அழுத்தமாக ஏற்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/06/27/105-2025-06-27-14-51-50.jpg)
அதைத் தொடர்ந்து சில முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தேன். இங்கே இருந்தால் என்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா என தெரியாததால் டூரிஸ்ட் விசாவில் துபாய் சென்றேன். அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நான் அந்த நிறுவனத்தின் உதவியுடன் பயிற்சிகள் பெற்று ரஷ்யா சென்றேன். அங்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. ஐரோப்பா கண்டத்தின் உயரமான சிகரம் ரஷ்யாவில் உள்ள மவுன்ட் எல்ப்ரோஷ் பனி மலையை 5,642 மீட்டர் உயரத்தை 12 மணி நேரத்துக்குள் ஏறி சாதனை படைத்தேன். அப்போது அங்கு என் மனதில், சொந்த கிராமத்தை விட்டு விவசாய நிலத்தை தவிர அதிகபட்சம் வெளியே எங்கேயும் செல்லாத எனது தந்தையின் பெயரை உலகத்தின் உச்சியில் உள்ள மலையில் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அங்கு எனது தந்தையின் பெயரை உச்சரித்தேன்.
எனது முதல் மலையேற்ற பயணத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்ததும் எனக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கோவில்பட்டி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் சப்போர்ட் பண்ணுனாங்க. மேலும் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளும் கிடைத்தது. அதன் மூலம் நான் தமிழ்நாட்டில் இருந்தே இரண்டாவதாக மலையேற்றத்துக்கு தயாரானேன். கடந்த ஜனவரி மாதத்தில், தென் அமெரிக்காவில் அர்ஜென்டினாவில் உள்ள உயரமான அக்கோனா காக்குவா பனி மலையில் ஏறினேன். அப்போது என்னுடன் ரஷ்யா மற்றும் இஸ்ரேலில் இருந்தும் வந்திருந்தவர்களை சேர்த்து மொத்தம் 5 பேர் மலை ஏறினோம். அதில் பல சவால்களை சந்தித்தேன். ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை. அதனால் தான் 6,962 மீட்டர் உயரமுள்ள பனி மலையை 18 நாட்களில் ஏறி சிகரத்தை அடைந்து அங்கேயும் என் அப்பாவின் பெயரை எதிரொலிக்க செய்தேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/06/27/103-2025-06-27-14-59-32.jpg)
தொடர் ஓட்டம், எனது விடாமுயற்சி, அசைக்க முடியாத மன உறுதிக்கு பலனாக ராமநாதபுரத்தை சேர்ந்த போஸ் என்கிற நண்பரின் சந்திப்பும், லயன்ஸ் கிளப் அறிமுகமும் கிடைத்து. அதன் மூலம் கிடைத்த உதவியால் இப்போது தென் ஆப்பிரிக்கா கண்டத்தின் தன்சானியாவில் உள்ள உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையில் ஏறுவதற்கு நல்லதொரு வாய்ப்பு அமைந்தது. கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய பயணத்தில் 5,835 மீட்டர் தூரத்தை 6 நாட்களில் 72 மணி நேரத்தில் ஏறி சிகரத்தை தொட்டு இன்று வீடு திரும்பி வந்துள்ளேன். மூன்று கண்டங்களில் உள்ள மூன்று உயரமான சிகரங்களிலும் என் அப்பாவின் பெயரை உச்சரித்தேன். மேலும் கிளிமஞ்சாரோ சிகரத்தில் மலையின் உச்சியில் இருந்து இந்திய ராணுவ வீரர்களின் சமீபத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசிய கொடியை பறக்க விட்டு பேனரை கையில் பிடித்தபடி மரியாதை செலுத்தினேன்.
அண்மையில் வெளியான தமிழ்நாடு பட்ஜெட்டில் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். இதில் என்னுடைய கோரிக்கை என்னவென்றால் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பயணத்துக்கு முன்பாகவே எனக்கு 45 லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அரசின் அறிவிப்பு என்பது ஒருவகையில் ஊக்குவிக்கக் கூடிய நல்ல உதவி தான். வரவேற்கிறேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/06/27/104-2025-06-27-14-52-06.jpg)
அடுத்த எனது இலக்காக எவரெஸ்ட் சிகரத்தை தான் நான் போக்கஸ் செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர்களை விட நான் வித்தியாசமாக முயற்சிகள் செய்து இலக்கை அடைய வேண்டும் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து தற்போது வரை மூன்று பேர் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுள்ளார்கள். வரும் ஏப்ரலில் நான்காவதாக நான் வித்தியாசமான முறையில் எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்று வர திட்டமிட்டு உள்ளேன். தற்போது 3 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளில் ஏறி விட்டேன். மீதமுள்ள 4 கண்டங்களின் மலைகளிலும் விரைவில் ஏறி சாதனை படைப்பேன்” என்றார் வெங்கட சுப்ரமணியன் நல்லசாமி.
கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்த வெங்கடசுப்பிரமணியத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உன் இடத்தை கண்டுபிடித்து, அந்த இடத்தை உனது சாதனைகளால் நிரப்பு என்பதற்கு வெங்கட சுப்ரமணியன் நல்லசாமி சிறப்பான உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
Follow Us