ரூ.1 லட்சம் பெற்ற கடனுக்கு வட்டி மேல் வட்டி கேட்டதால் விவசாயி ஒருவர் தனது கிட்னியை விற்ற அவல சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரோஷன் சதாசிவ் குடே. தனது விவசாய தொழிலில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டதால், ரோஷன் குடே பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். அதற்காக, வட்டிக்காரர்கள் பலரிடம் ரூ.1 லட்சத்தை கூட்டுக் கடனாக வாங்கியுள்ளார்.
பால் வியாபாரம் செழிக்கத் தொடங்குவதற்கு முன்பே, அவர் வாங்கிய பசுக்கள் இறந்துவிட்டன. மேலும், அவருக்குச் சொந்தமான நிலத்தில் முளைத்த பயிர்கள் சேதமடைந்தன. இதற்கிடையில், வாங்கிய கடனுக்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 வட்டி வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி மட்டுமே தினசரியாக உயர்ந்து ஒரு கட்டத்தில் மொத்த கடன் தொகை ரூ.74 லட்சமாக உயர்ந்துள்ளது.
அனைத்து வியாபாரமும் தோல்வியில் முடிந்ததால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் ரோஷன் தவித்து வந்துள்ளார். இதனிடையே, மேலும் கடன் கொடுத்த வட்டிக்காரர்களும் குடேவையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் கடன் கொடுமை ரோஷன் குடேவின் கழுத்தை இறுக்கியுள்ளது. கடனை அடைக்க தனது 2 ஏக்கர் நிலம், டிராக்டர், இருசக்கர வாகனம், வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் விற்று கடனை அடைத்தார். ஆனாலும் கடன் தொகை முழுமையாக அடையவில்லை என்று கூறி மீதமுள்ள கடனை அடைக்குமாறு வட்டிக்காரர்கள் குடேவை மிரட்டியுள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், கடனை அடைக்க ஒரு இடைத்தரகர் மூலம் தனது சிறுநீரகத்தை விற்க குடே முடிவு செய்துள்ளார். அதன்படி, கொல்கத்தாவுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர், கம்போடியாவுக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை ரூ.8 லட்சத்துக்கு விற்றுள்ளார். சிறுநீரகத்தை விற்றும் கடன் தொகை முழுமையாக அடைக்கவில்லை என்று வட்டிக்காரர்கள் மீண்டும் மிரட்டியுள்ளனர். மன அழுத்தம் தாங்காத குடே, வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் தனது மன மற்றும் உடல் ரீதியாக துன்பம் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு நீதி வேண்டும், நீதி கிடைக்காவிட்டால் மும்பையில் உள்ள மந்திராலயாவின் முன் தானும் தனது குடும்பத்தினரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.
குடே அளித்த புகாரின் அடிப்படையில், கடன் கொடுத்தவர்களான கிஷோர் பவன்குலே, மனிஷ் கல்பண்டே, லக்ஷ்மன் உர்குடே, பிரதீப் பவன்குலே, சஞ்சய் பல்லார்புரே மற்றும் லக்ஷ்மன் போர்கர் என அடையாளம் காணப்பட்டு அவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/kidney-2025-12-18-10-23-12.jpg)