கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தளி அடுத்துள்ள சூடசந்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளப்பா (வயது 60). விவசாயியான இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும், 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர். மேலும் இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று (12.08.2025) அதிகாலை இவர் வழக்கம் போல் கால்நடைகளின் சாணத்தை வயல்களுக்கு அள்ளி சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றி வந்துள்ளது. இதனையடுத்து அந்த காட்டு யானை கள்ளப்பாவை தாக்கியது. இதனால் கள்ளப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய சூழலில் தான் கள்ளப்பாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு அந்த பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது, விவசாயிகள், பொதுமக்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வனத்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.