வேலூர் அடுத்த விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி மதியம் 12:30 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்பட்டிருந்ததால், விவசாயிகள் சுமார் 11 மணிக்கே வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மத்திய அமைச்சர் மதியம் 01:39 மணிக்குத் தான் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

Advertisment

பின்னர், நிகழ்ச்சி மதியம் 02:30 மணிக்கு முடிந்தது. இதற்கு இடையில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் தெரிகிறது. இதனால், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு கீழே வந்த அமைச்சரிடம், குடியாத்தம் உப்பரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த A.C. பாபு என்ற விவசாயி, “நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், இதனால் சர்க்கரை நோயாளியான நாங்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானோம்” என்று மத்திய அமைச்சரிடமே நேரடியாக முறையிட்டார். அப்போது, அங்கிருந்த பாஜகவினர் அந்த விவசாயியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, “திமுக கைகூலி” எனக் கோஷமிட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு அவரை விரட்டினர். பின்னர், காவல்துறையினர் அவரை மீட்டு சென்று இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறு நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Advertisment

இதுகுறித்து விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “வந்திருந்த விவசாயிகளுக்கு 600 உணவுகளைத் தயார் செய்திருந்தோம். அமைச்சர் வருவதற்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அதற்கு இடையில் விவசாயிகளுக்கு சுண்டல், டீ, காபி உள்ளிட்டவற்றை வழங்கினோம். பிறகு அமைச்சர் நிகழ்ச்சி முடித்து சென்ற பிறகு மதியம் 2:30 அளவில் அனைத்து விவசாயிகளுக்கும் உணவு வழங்கினோம்” எனக் கூறினர். மத்திய அமைச்சர் பங்கேற்ற இந்த விழாவில் இறுதியாக தேசிய கீதம் ஒலிக்காதது குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் எதுவும் பதில் கூறவில்லை.

முன்னதாக விழாவில், அமைச்சரின் கையால் நான்கு விவசாயிகளுக்கு  நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக விவசாயிகளை அமர வைத்திருந்தனர். ஆனால் அமைச்சர் காலதாமதமாக வந்ததாலும், இறுதியில் அமைச்சர் விமானத்திற்குச் செல்ல நேரம் ஆகிவிட்டது என்பதாலும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவசர அவசரமாக நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. 

Advertisment

அமைச்சர் பேசுகையிலும், “எனக்கு நேரமில்லை, நான் உடனடியாகப் புறப்பட வேண்டும்” எனக் கூறினார். நிகழ்ச்சி முடிந்து இறுதியாக தேசிய கீதமும் ஒலிக்கப்படவில்லை. இப்படி பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் மிகுந்த குழப்பத்திற்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.