Fans furious with Messi and chaos on the first day of his arrival in India
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக கொல்கத்தா விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்த அவருக்கு விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்பு கொல்கத்தாவின் லேக் டவுனில் நிறுவப்பட்டுள்ள தன்னுடைய 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற்ற மோகன் பாகன் மற்றும் டயமண்ட் ஹார்பர்ஸ் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக மெஸ்ஸி மைதானத்துக்கு வந்தார். அப்போது, அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறிது நேரம் மைதானத்தில் இருந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்து, தாங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்தில் தூக்கி எறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என ஆத்திரமடைந்து ரசிகர்கள் மைதானத்திற்குள் குதித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த டெண்டுகளை சூறையாடினர்.
இதையடுத்து மெஸ்ஸியின் ரசிகர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து வெளியேறச் செய்தனர். இதனால், கால்பந்து மைதானம் கலவரம் நடந்த இடம் போல் மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெஸ்ஸி இந்தியா வந்த முதல் நாளிலேயே இச்சம்பவம் நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது.
Follow Us