பிரபல யூடியூபர் சுதர்சன் என்பவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சுதர்சன் என்பவர் யூடியூபில், ‘டெக் சூப்பர்ஸ்டார்’ என்ற சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில், தொழில்நுட்பம் தொடர்பாகவும் மொபைல் போன் தொடர்பாகவும் வீடியோ போட்டு வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமலா தேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அந்த பெண்ணை சுதர்சன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது, பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன்னிடம் மேலும் 20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது மனைவி விமலா தேவி கடந்த ஜூன் 27ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணைக் கொடுமையால் திருமணமாகி 78 நாட்களில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.