Famous rowdy hit in Perambalur by Police
பெரம்பலூரில் கொட்டு ராஜா எனும் அழகு ராஜா என்ற ரவுடியை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே கடந்த 24ஆம் தேதி அன்று வெள்ளைக்காளி என்ற பிரபல ரவுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சென்னை புழல் சிறைக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அப்போது திருமாந்துறை டோல்கேட் அருகே மர்ம கும்பல் சிலர், போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீசி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் ஒரு உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் இன்னொரு காவலர் காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீசி இரண்டு சொகுசு கார்களில் அந்த கும்பல் டோல்கேட் தடுப்புகளை உடைத்து தப்பிச் சென்ற சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானதை அடுத்து அந்த வாகன எண்களை வைத்து அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அந்த மர்ம கும்பலை பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த நிலையில், போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்திவிட்டு பதுங்கிருந்த கொட்டு ராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அவர்களை காட்டுப் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு கொட்டு ராஜா அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது அவர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு போலீசாருக்கு அரிவாள் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொட்டு ராஜா உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொட்டு ராஜா என்ற ரவுடி மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையின் நிலுவையில் இருப்பதும், கூலிப்படை போல் இவர் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
Follow Us