சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை பிராட்வே அருகே உள்ள பி.ஆர்.என் கார்டன் பகுதியில் பிறந்தவர் காக்கதோப்பு பாலாஜி. இவர் அதே காக்காதோப்பு பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த யுவராஜ் மற்றும் இன்பராஜ் உடன் தொடர்ந்து நட்பில் இருந்து வந்த நிலையில், தொழில் போட்டி காரணமாகக் கூட்டாளியான யுவராஜை கொன்றதாக கூறப்பட்டது. மேலும் செம்மரக் கடத்தலிலும் காக்கதோப்பு பாலாஜி ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. காக்காதோப்பு பாலாஜி மீது கொலை வழக்குகள், அடிதடி, மிரட்டல், ஆட்கடத்தல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது.

இத்தகைய சூழலில் கடந்த வருடம் செப். 18 ஆம் தேதி சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ரவுடி காக்காதோப்பு பாலாஜியை கைது செய்யச் சென்ற போலீசாரை தாக்க முயன்றபோது தற்காப்புக்காக சுட்டதில் உயிரிழந்தார்.

காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு வியாசர்பாடி காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்காப்பிற்காக காக்காதோப்பு பாலாஜியை சுட்ட காவல் ஆய்வாளர் சரவணன் கொடுத்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.