உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரிதேஷ். கல்லூரி மாணவரான ரிதேஷுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அவர்களுக்கு இடையேயான பழக்கம் நெருக்கமானதைத் தொடர்ந்து, ரிதேஷும் அந்த இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாக இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்
அந்த வகையில் கடந்த 18 ஆம் தேதி ரிதேஷும் அவரது காதலியும் காஜியாபாத் அருகே சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை இளம்பெண்ணின் தந்தையும் சகோதரனும் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ரிதேஷின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். மேலும் ரிதேஷ் குறித்து விசாரிக்கத் தொடங்கிய அவர்கள், அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அதற்கு அடுத்த நாள், அதாவது 19 ஆம் தேதி ரிதேஷ் கல்லூரிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். சாலையில் தனது நண்பருடன் ரிதேஷ் சென்றுகொண்டிருந்த போது, காரில் வந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரிதேஷை கீழே தள்ளிவிட்டு கடுமையாகத் தாக்கினர். மேலும் இளம்பெண்ணின் சகோதரன், ரிதேஷ் மற்றும் அவருடன் வந்த மாணவரையும் இரும்புக் குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், ரிதேஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரிதேஷின் தந்தை, மகனைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஜியாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் முழுவதையும் அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த நிலையில், அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/4-2025-11-22-17-30-04.jpg)