மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொட்டப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகள் 24 வயதான ராகவி. இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர்  சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு, ராகவி தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ராகவிக்கு பொட்டப்பட்டியைச் சேர்ந்த 21 வயதான சதீஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியிருக்கிறது. இந்த காதலுக்கு சதீஷ் குமாரின் வீட்டில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஆனால், ராகவியின் வீட்டில், “உனக்கு ஏற்கனவே திருமணமாகி, இரு குழந்தைகள் இருக்கின்றன. அப்படி இருக்கையில், உனக்கு இந்தக் காதல் எல்லாம் தேவையா?" என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், சதீஷுடனான காதலை கைவிட மறுத்த ராகவி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி, காதலர் சதீஷை மறுமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் திருச்சியில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே, மகள் ராகவியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் பொட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன், வீட்டில் இருந்த தங்க நகைகளையும் ராகவி எடுத்துச் சென்றுவிட்டதாகத் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டனர். அதன்படி, ஆகஸ்ட் 17 அன்று சதீஷ்குமார் மற்றும் ராகவி, பெண்ணின் பெற்றோர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணை முடிந்த பிறகு, சதீஷ்குமார் மற்றும் ராகவி இருவரும் அன்று இரவு இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருவரும் சென்றுகொண்டுருந்த போது, பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கிவிசப்பட்டு படுகாயமடைந்தனர். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கியவர்கள் படுகாயம் அடைந்த சதீஷ் குமார் மற்றும் ராகவி இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராகவியை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரனையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், ராகவி இரு குழந்தைகளை விட்டுவிட்டு சதீஷை மறுமணம் செய்ததால், இருவரையும் கொலை செய்ய பெற்றோர் தீட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 17 அன்று விசாரணை முடிந்து இருவரும் திருச்சிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றி கொலை செய்தது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, ராகவி கொடுத்த புகாரின் பேரில், அவரது தந்தை அழகர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கணவரைக் காரை ஏற்றி படுகொலை செய்த இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.