வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்து இறுதிச் சடங்கு செய்த சம்பவம் ராஜஸ்தானின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான குடியா என்ற பெண். இவர் ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் இஞ்சபுரா கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் தாக்கூரை கடந்தாண்டு மே மாதம் திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.15 லட்சம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், வீட்டுப் பொருட்கள் மற்றும் நகைகளை குடியாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.

Advertisment

இருப்பினும் குடியாவின் மாமியார், கார், தங்கச் சங்கிலி மற்றும் எருமை உட்பட பல பொருட்கள் கூடுதலாக வரதட்சணையாக கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனை குடியாவின் பெற்றோரால் கொடுக்க முடியாததால் குடியாவை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாமியார் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், குடியாவுக்கு வேறு ஒரு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகித்து பங்கஜ் அவரை அடிக்கடி தாக்கி துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் குடியா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி குடியாவின் குடும்பத்தினர், குடியாவை பார்ப்பதற்காக இஞ்சபுரா கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது குடியாவுக்கு இறுதிச் சடங்கு செய்து அவரது உடல் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அந்த புகாரில், குடியாவை வரதட்சணை கேட்டு அவரது மாமியார் கொலை செய்துள்ளதாகவும், தங்களுக்கு தெரிவிக்காமல் குடியாவின் உடலை மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ஒரு சிதையில் வைத்து இறுதிச் சடங்கு எரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வீட்டின் பல அறைகளில் ரத்தம் சிதறிக் கிடந்ததாகவும் வீடு அலங்கோலமாக காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Advertisment

அந்த புகாரின் அடிப்படையில் தடயவியல் அறிவியல் ஆய்வக் குழுவுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலிருந்து ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் அந்த உடலை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ குழு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை நடத்தியது. இதற்கிடையில் பங்கஜ் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ரத்தக் கறைகள், கோடாரி, மண்வெட்டி, குச்சிகள் மற்றும் பிற ஆயுதங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார், பங்கஜை உடனடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாவின் மாமியார் உள்ளிட்ட மற்றவர்கள் தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.