திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் ராஜேஷ்குமாரை திருப்பதி கோவிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக நேற்று முன்தினம் சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சொந்த ஊர் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த மாருதி டிசையர் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பிரேதப்  பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, பிரேதப் பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராஜேஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளின் உடலை இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் முறையான சடங்குகள் செய்து நான்கு பேரின் உடல்களையும் உறவினர்கள் நல்லடக்கம் செய்தனர். உடல்களைப் பார்த்து உறவினர் கத்தி கதறி அழுதனர் இந்தச் சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது.

Advertisment

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.