வீட்டுப்பாடம் முடிக்காத ஒரு மாணவனைக் கண்டித்ததற்காக ஆசிரியரை, மாணவரின் பெற்றோர் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள ஷாவாஸ்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அந்த ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், ராகேஷ் ரஞ்சன் ஸ்ரீவஸ்வதா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை செய்ய தவறியதற்காக மாணவன் ஒருவரை ராகேஷ் திட்டி கண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து, மறுநாள் வரும்போது வீட்டுப்பாடத்தை முடிக்குமாறு அந்த மாணவனுக்கு ராகேஷ் ரஞ்சன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

இருப்பினும், மாணவனை ராகேஷ் திட்டியதால் மாணவனின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி மாணவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பள்ளிக்கு வந்துள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், மாணவனின் குடும்பத்தினர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ஆசிரியர் ராகேஷ் ரஞ்சனை குச்சி மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தினர். எதற்காக தன்னை அடிக்கிறார்கள் என்பதை ராகேஷ் உணர்வதற்குள் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலை மற்ற ஆசிரியர் தடுக்க முயன்றபோது அவரையும் சேர்த்து மாணவனின் குடும்பத்தினர் தாக்கினர்.

இந்த சம்பவத்தை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment