தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அம்மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் கடந்த 19ம் தேதி சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் 70க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை புகார் மனுவாக அளித்தனர். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்.பி. உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு.. சம்மந்தப்பட்ட சப் டிவிஷன் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வழக்கம்போல் நடைபெற்ற இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில்.. தூத்துக்குடி சண்முகபுரம் சலவைத் தொழிலாளர் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவரும் டிப் - டாப்பாக உடை அணிந்த நபர் ஒருவரும் கலந்துகொண்டு.. எஸ்.பி.யிடம் குடும்பப் பிரச்சினை தொடர்பாக மனு அளித்தனர்.
அப்போது மனுதாரரான பெண்ணிடம் எஸ்.பி. விசாரணை நடத்தியபோது, அந்த டிப் டாப் நபர் குறுக்க குறுக்க பேசி எஸ்.பி.யிடம் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த எஸ்.பி. அந்தப் பெண்ணுக்கும், அந்த டிப் - டாப் நபருக்குமான உறவு முறையை கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் பதில் கூறாமல் தன்னை ஒரு சமூக ஆர்வலர் என்றும் தனக்கு நிறைய ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் தெரியும் என கெத்து காட்டியுள்ளார்.
மேலும், சந்தேகம் வலுக்கவே உஷாரான எஸ்.பி. ஆல்பர்ட் ஜான்.. அந்த டிப் - டாப் நபரை வேறு ஒரு அறையில் அமர சொல்லிவிட்டு அப்பெண்ணிடம் தனியாக விசாரித்துள்ளார். அப்போது, அந்த பெண் "அந்த நபர் யார் என்று எனக்குத் தெரியாது. நான் தூத்துக்குடி சவுத் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க என் தம்பியுடன் நின்று கொண்டிருந்தேன். அங்குவந்த இந்த டிப்டாப் நபர், என் தம்பியிடம் அவராகவே வந்து பேசி ,"மாவட்ட எஸ்.பி.யை எனக்கு நன்றாக தெரியும். எஸ். பி. ஆபீஸ்க்கு வாருங்கள். நான் அவரிடம் பேசி பிரச்சனையை முடித்து தருகிறேன் என கூறி ஐந்தாயிரம் ரூபாய் கேட்டார். பிரச்சனை முடிந்தால் போதும் என நம்பி நானும் என் தம்பியும் சேர்ந்து ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். அதன் பிறகு அவர் சவுத் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எங்களை எஸ்.பி. ஆபிஸ்க்கு அழைத்து வந்தார் என புட்டு புட்டு வைத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.பி, அந்த டிப்டாப் நபரை அழைத்து போலீஸ் பாணியில் துருவி துருவி விசாரித்தபோது பல்வேறு பகீர் தகவல்கள் வெளியானது. அதில், அந்த டிப்டாப் நபர் தான்.. கரூர் சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 49 வயதான வின்சென்ட். இவர் கரூர் Anti Corruption Dynamic Party என்னும் அமைப்பை சேர்ந்தவர். மேலும், போலி சமூக ஆர்வலரான வின்சென்ட், தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் சுற்றி திரிந்து.. "எனக்கு அந்த அதிகாரியை தெரியும்.. இந்த ஜட்ஜை தெரியும்"... என டிசைன் டிசைனாக ஏமாற்றி அப்பாவிகளிடம் பண மோசடி செய்து வந்துள்ளார்.
அதே போல், தூத்துக்குடி பெண்ணிடமும் குடும்ப பிரச்சனையை எஸ்.பி.யிடம் பேசி தீர்த்து வைப்பதாக 5 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு புரோக்கராக வந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட வின்சென்ட் மீது ஏற்கனவே கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மோசடி, திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 4 வழக்குகள் பதிவாகி இருப்பதும் அம்பலமானது.
இதை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டிப் - டாப் ஆசாமி வின்சென்ட்டை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பின்னர், இரவில் வழக்குப்பதிவு நிலவரத்தை எஸ்.பி. கேட்டபோது டிப் - டாப் ஆசாமியின் பின்னணி பெருசாக இருப்பதால் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் டென்ஷனான எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் சிப்காட் போலீசாரை எச்சரித்ததை தொடர்ந்து.. நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்த பெண்ணிடம் புகார் மனு எழுதி வாங்கி.. இரவோடு இரவாக வழக்கு பதிவு செய்து போலி சமூக ஆர்வலர் வின்சென்ட்டை சிறையில் அடைத்தனர்.
ஆட்டை கடித்து.. மாட்டை கடித்து.. கடைசியில மனுஷனை கடித்த கதையாக மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கெத்தாக வந்ததும், எஸ்.பி. யிடமே பீலா விட்டு கைதான சம்பவமும் போலீஸ் வட்டாரத்தை கிறுகிறுக்க வைத்துள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
Follow Us