புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் மற்றும் சில்லறை விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மணமேல்குடி அருகே பொன்னகரம் செல்லும் வழியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே ஒரு இளைஞர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாகவும், தன்னை காவலர் என்று கூறி கைத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும் மணமேல்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற காவலர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை அழைத்து வந்து விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.

Advertisment

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர், கீழமாந்தாங்குடியைச் சேர்ந்த ஜெகதீசனின் மகன் பிரித்விராஜ் (26). பட்டதாரியான இவர், படிக்கும் காலத்தில் காவலராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். ஆனால், படிக்கும் போது சக நண்பர்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். பின்னர், தனது தேவைக்கு கஞ்சா வாங்குவதோடு, வருமானத்திற்காக முழுநேர கஞ்சா விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

மேலும், தனது பாதுகாப்பிற்காக ஏர்கன் பிஸ்டல் வாங்கி வைத்திருந்ததுடன், போலி விரல் ரேகை பதிவு தொழில்நுட்பவியலாளர் எஸ்.ஐ. அடையாள அட்டையும் தயாரித்து, பலரை மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய சோதனையில், பிரித்விராஜிடம் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா, பணம், செல்போன், மோட்டார் சைக்கிள், ஏர்கன் பிஸ்டல், கைத்துப்பாக்கி மற்றும் போலி எஸ்.ஐ. அடையாள அட்டை ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் பிரித்விராஜை போலீசார் கைது செய்தனர்.

போலி எஸ்.ஐ அடையாள வைத்துக் கொண்டு கைத்துப்பாக்காயுடன் இளைஞர் கஞ்சா விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.