சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த வழக்கைத் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அஜித்குமார் தாக்கப்பட்ட இடமான மடப்புரம் கோயில் பின்புறம் உள்ள கோசாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாகவே சிபிஐ அதிகாரிகள் இன்று (19-07-25) விசாரணை நடத்தினர். அதில், காவலர்கள் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனை வரவழைத்து விசாரணையை மேற்கொண்டனர். அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் கைரேகை, காலணியை கைப்பற்றினர். மேலும், காவலர்கள் தாக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் பைப் போல புதிதாக பைப்பும், வெள்ளை துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி அஜித் தாக்கப்பட்டது எப்படி என செயல்முறை மூலம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், அஜித்தை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்தது அம்பலமாகியுள்ளது. மடப்புரம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்து வந்த சிபிஐ அதிகாரிகள், அஜித்தை விசாரணைக்காக அழைத்துச் சென்ற டெம்போ வாகனத்தை வரவழைத்து சோதனை நடத்தினர். அப்போது, TN 01 G 0491 என்ற பதிவெண்ணை, TN 63 G 0491 என்ற பதிவெண் ஸ்டிக்கரை போலியாக ஒட்டி வாகனத்தை போலீசார் பயன்படுத்தியுள்ளனர் என்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த டெம்போ வாகனத்தில் இருந்த மதுபாட்டில்கள், சீட்டுக்கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட காவலர்கள் போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி விசாரணை நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/19/ajith-2025-07-19-19-50-18.jpg)