கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தில் வீட்டிற்கே சென்று மணிவண்ணன் என்பவர் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என சட்டவிரோதமாக கண்டறிந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆணா, பெண்ணா என கருவி மூலம் நான்கு பேருக்கு மேல் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த சேலம் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) நந்தினி தலைமையிலான மாவட்ட சுகாதார அலுவலர்கள், சவுண்டம்மாள் மற்றும் யோகானந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சட்டத்திற்குப் புறம்பாக கருவி மூலம் ஆணா, பெண்ணா என தெரிவித்த மணிவண்ணன் என்பவரை, போலீசார் உதவியுடன் கைது செய்து விசாரணை செய்ததில், இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கே சென்று ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருவி மூலம் தெரிவித்து வந்தது தெரியவந்தது.
இதற்கு 5,000 முதல் 50,000 வரை பணம் வாங்குவதாகவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் ஆணா, பெண்ணா என கண்டறியும் உபகரணங்களைப் பறிமுதல் செய்து, மணிவண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.