தமிழகம் முழுவதும் போலி தோல் நோய் மருத்துவம் புற்றுநோயாக பரவி வருவதை அரசு தடுக்க வேண்டும் என இந்திய தோல் மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் போலி தோல் நோய் மருத்துவம் புற்றுநோய் போல், பரவி வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோல் நோய் விழிப்புணர்வு குறித்த தேசிய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

Advertisment

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி நூலக அரங்கில் இந்திய தோல் மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் "பால்வினை நோயியல் மற்றும் நேரடி தோல் அறுவை சிகிச்சை பயிலரங்கம் 2026" என்ற தோல் நோய் விழிப்புணர்வு குறித்து இருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கிற்கு  மருத்துவக் கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சி. திருப்பதி பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தோல் நோய் மருத்துவர் சங்கத் தலைவர் பேராசிரியர்  மருத்துவர் சி.கே.கவியரசன் வரவேற்புரையாற்றினார். தோல் நோய் மருத்துவர்கள்.பி.வி.எஸ்.பிரசாத், அமுதா,  ஆர்.பார்த்திபன், கண்ணம்மாள்,  சண்முகசேகர், யோகிந்தர் சிங், அசோக் சுவாமிநாதன், அவினாஷ் பிரவின், தமிழ்செல்வி, பி. பூரணா ஆகியோர் முகப்பரு தழும்பு அறுவை சிகிச்சைகள், வெண்புள்ளி அறுவை சிகிச்சை, தழும்பு சீரமைப்பு மற்றும் தோல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு தோல் அறுவை சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.

Advertisment

லேசர் சிகிச்சை முறைகள் குறித்து நேரடி செயல் விளக்கத்தை டாக்டர்கள் அவிடஸ் ஜான் ராகேஷ் பிரசாத், காளீஸ்வரன்,பிரேம்குமார் ஆகியோர் வழங்கினார்கள். நேரடி முடி மாற்று அறுவை சிகிச்சை செயல் விளக்கத்தை மருத்துவர்கள் குமரேசன், சொர்ணகுமார் ஆகியோர் செய்து காட்டினார்கள். தமிழ்நாடு தோல் மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் பிரேம்குமார் சிறப்புரையாற்றினார்.  சங்க பொருளாளர் மருத்துவர் அருள் ராஜா நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தோல் மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் பி.கே.கவியரசன், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் அருள்ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தோல் மருத்துவ படிப்பு படிக்காமல், எம்பிபிஎஸ் படிப்பு படிக்காமல் தகுதியற்றவர்கள் தங்களை தோல் நோய் மருத்துவர்களாக பாவித்து எல்லா ஊர்களிலும் போலி மருத்துவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்வதாக கூறி போலி மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தமிழ்நாடு முழுவதிலும் புற்றுநோய் போல் பரவி வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.