மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். அதே போல், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.

இதற்கிடையில், தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில் அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால், அந்த முடிவில் இருந்து பின்வாங்கி இந்தி கட்டாயமாக இருப்பதற்கு விருப்பமான மூன்றாவது மொழியக இருக்கும் என்ற அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்தி மொழியை ஆதரிக்கும் தேசிய கல்வி கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதன் பின்னர் அதே இந்தி மொழியை மறைமுகமாக மாணவர்களுக்கு திணிப்பதாக கூறி மராத்தி அமைப்புகள் உள்பட எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்படாது என்று கூறி தனது இரண்டு முடிவுகளிலும் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.

மொழி தொடர்பான சர்ச்சை அம்மாநிலத்தில் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி மராத்தி பேசாததால் இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இது தொடர்பாக தாக்குதல் நடத்திய நவநிர்மாண் சேனா கட்சியினர் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஆங்கில மொழியை மதித்து, இந்தி மொழிக்கு எதிராக செயல்படுவது ஏன் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “மகாராஷ்டிராவில் மராத்தி மொழி மீது பெருமைப்படுவதில் தவறு இல்லை. ஆனால், மொழி காரணமாக யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மொழியின் அடிப்படையில் யாராவது மக்களை அடித்தால் அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இது போன்ற மொழி சர்ச்சையை உருவாக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

நமது மராத்தி மொழி நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால், இந்தியாவின் எந்த மொழிக்கும் இது போன்ற அநீதி இழைக்கப்படக் கூடாது. இதனை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் இந்த மக்கள் ஆங்கில மொழியை தூக்கிபிடித்துக் கொண்டு இந்தி மொழி தொடர்பாக பிரச்சனைகளை எழுப்புவது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது என்ன மாதிரியான சிந்தனை? என்ன மாதிரியான செயல்பாடு?. நான் மிக தெளிவாகச் சொல்கிறேன். மராத்தி மொழி மீது பெருமைக் கொள்வதும், மக்களை தாக்குவதும் வேறு வேறு. மற்ற மொழியை பேசியதற்காக யாராவது மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், போலீஸ் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தை தனது கையில் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.