தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (14.10.2025) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையே நேற்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியானது. 

Advertisment

அதாவது அனைத்து வகையிலும் இந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. அதாவது புதிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களின் தாய்மொழி, ஆங்கிலம் அதனைத் தவிர்த்து மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தி மொழிக்குத் தடை விதிக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாயானது. 

Advertisment

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாக வதந்தி பரவுகிறது. தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே. ‘அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை’ என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.வதந்தியைப் பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.