தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்கியுள்ளது. இந்த தேர்வு வரும் 26ஆம் தேதி (26.03.2026) வரை நடைபெற உள்ளது. அதன்படி காலை 10:00 மணி முதல் மதியம் 01:15 மணி வரை இந்த தேர்வை சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 27 ஆயிரத்து 783 தனித்தேர்வர்களும் அடங்குவர். இதற்காக தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. 

Advertisment

இதற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம்  8ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு தொடர்பான புகார்கள் அல்லது சந்தேகங்களுக்கு 94983 83075 மற்றும் 94983 83076 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்க்கபட்டுள்ளது. அதோடு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் மாணவர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

Advertisment

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார்.