திருவள்ளூர் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது தனது மனைவி லலிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், லலிதா கடந்த 3ஆம் தேதி மேய்ச்சலுக்காக மாட்டை ஏரிப்பகுதிக்கு ஓட்டி சென்றுள்ளார். பிற்பகல் கடந்த பின்னும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த, உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அங்கு, லலிதா ஒரு தகரக் கொட்டகையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களுடன், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, அங்குள்ள தடையங்களைச் சேகரித்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவத்தன்று காலை வேளையில், "லலிதாவும் அவரது 10 வயது மகளும் மேய்ச்சலுக்காக மாடுகளை ஏரிப்பகுதிக்கு ஒட்டி சென்றுள்ளனர்.
இந்த சமயத்தில், அங்கு லலிதாவின் ஆண் நண்பர் சுகுமார், லலிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சுகுமார் லலிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதனைக் கண்ட அவரது மகள், கதறி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுகுமார் அந்த சிறுமியையும் கழுத்தை நெரித்துள்ளார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த லலிதா அவரை தள்ளிவிட்டு, தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மகள் பள்ளிக்குச் சென்றதையடுத்து, லலிதா மீண்டும் மாடுகளை மேய்ப்பதற்காக ஏரிக்கு வந்துள்ளார்.
மது போதையில் அங்கேயே காத்திருந்த சுகுமார், லலிதா தனியாக இருப்பதைப் பார்த்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது லலிதாவைக் கடுமையாகத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதனிடையே, இவர்களுக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், அண்மைக் காலங்களில் லலிதா, சுகுமாரிடம் இருந்து விலகி இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சுகுமாரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பின்பு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow Us