திருச்சி மணப்பாறை அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டை அலுவலகத்தில் ஜூலை 20 ஆம் தேதி இளம்பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலதுறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளம்பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கழனிவாசல்பட்டியைச் சேர்ந்தவர் 30 வயதான சுகன்யா. இவருக்கும், கஸ்பாபொய்கைபட்டியைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணமான சில மாதங்களில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருடன், சுகன்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அது திருமணத்தை மீறிய உறவாக மாறிய நிலையில், தினேஷும், சுகன்யாவும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். அதன்பிறகு, உறவினர்கள் சென்று சுகன்யாவை தினேஷிடம் இருந்து பிரித்து அழைத்து வந்துள்ளனர். ஆனால், கணவர் கலையரசன், சுகன்யாவுடன் வாழ முடியாது என்று கூறி அவரை விவாகரத்து செய்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் சுகன்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வினோத்தைப் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்தச் சூழலில், முன்னாள் காதலரான கஸ்பாபொய்கைபட்டியைச் சேர்ந்த தினேஷுடன், சுகன்யாவுக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இருவரும் முன்பு போல அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டும், தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இதற்கிடையே, தினேஷுக்கு திருமணமாகி, அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இருப்பினும், தினேஷ், சுகன்யாவுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சுகன்யா சென்னையில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அடிக்கடி தினேஷுடன் செல்போனில் பேசி வந்த சுகன்யா, கடந்த 15 நாட்களாக அதனைத் தவிர்த்து வந்துள்ளார். மேலும், தினேஷைத் தவிர வேறு சில ஆண் நண்பர்களுடன் சுகன்யா பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், சுகன்யா வேலை பார்க்கும் நிறுவனத்திற்கே  சென்றுள்ளார். பின்னர், அவரிடம் பேசி, தன்னுடன் திருச்சிக்கு வருமாறு அழைத்துச் வந்துள்ளார். இருவரும் ரயில் மூலம் திருச்சி  வந்த நிலையில், அங்கிருந்து தாங்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திற்கு சென்றிருக்கின்றனர்.

Advertisment

இதையடுத்து, சிட்கோ வளாகத்தில் வைத்து, தன்னுடன் பேசாதது குறித்தும், வேறு ஆண்களுடன் பேசுவது குறித்தும் சுகன்யாவிடம் தினேஷ் கேட்டிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. மேலும், "என்னால் இனி உன்னுடன் பேச முடியாது. நீயும் எனக்கு கால் பண்ணாத. என்னை விட்டுவிடு..." என்று சுகன்யா கோபமாகக்  கத்தியிருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த தினேஷ், சுகன்யாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி, கொலை செய்திருக்கிறார். அதன்பிறகு உடலை அங்கேயே போட்டுவிட்டு தினேஷ் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில், தினேஷை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளம்பெண், தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு வேறு ஆண்களுடன் பேசியதால் கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.