நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் கடந்த ஜூலை 28ஆம் தேதி மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையில் நடைபெற்றது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் நடைபெற்ற இந்த விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி, விசிக எம்.பி திருமாவளவன் உள்ளிட்டோர் பஹல்காமில் தாக்குதல் நடந்த போது ஏற்பட்ட பாதுகாப்பு குறையின்மை குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை நிறுத்தியது தான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து கேள்விகளை முன்வைத்து ஒன்றிய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர். அதே சமயம், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரால் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பெருமைப் பேசி வந்தனர். இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை எந்த உலகத் தலைவரும் நிறுத்தவில்லை என்று கூறிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமல் இருந்தது விவாதப்பொருளாக மாறியது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 10வது நாள் இன்று (01-08-25) நாடாளுமன்றத்தில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும், மணிப்பூரில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான ஒப்புதலுக்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்தார். இதனிடையே, பீகார் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்களவையிலும், திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையிலும் இடைநீக்க நோட்டீஸை அளித்துள்ளனர். ஏற்கெனவே, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரஞ்சீத் ரஞ்சன் ஆகியோர் பீகாரின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தத்தின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தாக்கங்கள் குறித்து விவாதிக்கக் கோரி விதி 267இன் கீழ் மாநிலங்களவையில் அலுவல் இடைநீக்க நோட்டீஸை அளித்திருந்தனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு நிராகரித்திருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. திருத்ததை நடத்தும் ஒரு சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் சார்பாக அரசாங்கம் பதிலளிக்க முடியாது என்று கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.