சித்தரிக்கப்பட்டபடம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது அன்னை தமிழுக்கு செய்கின்ற பெருந்துரோகம். தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10ஆம் வகுப்பு படிக்கும். சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது பழைய செய்தி. மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை விலக்கு அளித்து இருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.
பள்ளிகளின் கோரிக்கையால் 2023-24 கல்வியாண்டிற்கு மட்டும் இவ்விலக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு விலக்கு அளிக்கப்படவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் 2025 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,184. இதில், பகுதி 1-இல் தமிழ்மொழிப்பாடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 8,86,089. கடந்த ஆண்டில் 95 மாணவர்கள் மட்டுமே பகுதி I-இல் பிற மொழிப் பாடங்களை எழுதியுள்ளனர். இவர்கள் 9ஆம் வகுப்பு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us