அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் கூட்டாகப் பங்கேற்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனையடுத்து செங்கோட்டையனை த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் அக்கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதோடு செங்கோட்டையன் நாளை (27.11.2025) த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக விஜய் உடனான பேச்சுவார்த்தையானது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ முடிவை செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது. மற்றொருபுறம் வரும் 30ஆம் தேதி, செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளார்.
எனவே அதற்கு முன்பாக தன்னுடைய நிலைப்பாட்டை செங்கோட்டையன் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தைத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 10ஆம் எண் நுழைவாயில் வழியாக (மற்றொரு நுழைவாயில் வழியாக) சபாநாயகர் அறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த செங்கோட்டையனிடம், அமைச்சர் சேகர்பாபு சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாகப் பேசிக்கொண்டிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/26/sengottaiyan-sekar-babu-2025-11-26-13-14-31.jpg)
அதற்குப் பிறகு செங்கோட்டையனும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒன்றாக வெளியில் வந்தனர். அதனைத் தொடர்ந்து மற்றொரு இடத்தில் தனியாக நின்று இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையே என்ன பேச்சுவார்த்தை என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை. முன்னதாக இவர்கள் இருவருமே அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us