இலங்கையின் சம்பூர் பகுதியில் அகழாய்வு பணிக்காக தோண்டிய பொழுது மனித எலும்புக்கூடுகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை திருகோணமலை சம்பூர் பகுதியில் இருந்த சிறுவர் பூங்கா அருகே கடற்கரையோர பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 'மைல்ஸ்' என்ற கண்ணிவெடிகளை அகற்றும் நிறுவனமானது இப்பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அகழாய்வு பணிக்காக குழி தோண்டிய பொழுது மனித எலும்புக்கூடுகள் கிடைத்தது.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த முதூர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.நஸ்லீம் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு அகழாய்வு நடத்த இடைக்கால தடை விதித்து சென்றார். அந்த பகுதி விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்களாக முன்பு ஒரு காலத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாளை துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்த பிறகு அகழாய்வு பணிகளை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.