10 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், “2025-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வுக்கான ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட கருத்துருவை அனுப்பி இயக்குனரின் ஆணை பெறவேண்டும். முதன்மை கல்வி அதிகாரியின் பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு பெறப்படும் கருத்துருக்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் விதிகளின்படி தகுதியுள்ளதா? என உறுதிசெய்த பின்னரே அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு விதிகளின்படி இல்லாத பள்ளிகளை பரிந்துரைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் 10 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேர்வு மையங்களுக்கு விண்ணப்பிக்கும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு பெறாத பள்ளிகள் தேர்வுமையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. அதன்படி, வருகிற 15-ந் தேதிக்குள் கருத்துருவை சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.