நாட்டையே உலுக்கிய பாலியல் சம்பவம்; முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அதிரடி தீர்ப்பு!

prajwal

EX Jds Mp prajwal revanna convicts at women abuse case in karnataka

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, தனது வீட்டில் பணிபுரிந்த பெண்கள் உட்பட பல பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியது. கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட இருந்த நேரத்தில், அவர் பல பெண்களுடன் இருப்பது போன்ற 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஒரு வழக்கும், மைசூர் கே.ஆர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையம் ஒரு வழக்கும் என மூன்று காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவை கர்நாடகா காங்கிரஸ் அரசு அமைத்தது. ஒரு மாத காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை, கடந்தாண்டு மே மாதம் பெங்களூரு விமான நிலையத்திலேயே வைத்து போலீஸ் கைது செய்தது.

பிரஜ்வல் ரேவண்ணா மீது பதியப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்து சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நேரத்தில், கடந்தாண்டு செப்டம்பர் முதல் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  1632 பக்கங்களைக் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 45 வயது பெண் ஒருவர் விட்டுவிடும் படி கெஞ்சியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தார் என்று பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் அந்த குற்றப்பத்திரிகையில், ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணா குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை, கொரானா பெருந்தொற்று காலத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் அடைத்து வைத்து வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குற்றப்பத்திரிகை குறித்து கடந்தாண்டு 2024 டிசம்பர் 31ஆம் தேதி விசாரணை சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. அடுத்த ஏழு மாதங்களில் 23 சாட்சிகளை விசாரித்து வீடியோ காட்சிகளின் முக்கிய தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கைகளையும், குற்றம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளையும் நீதிமன்றம் மதிப்பாய்வு செய்தது. இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 18ஆம் தேதியுடன் ஒட்டுமொத்த விசாரணையும் முடிந்தது.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது பதியப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்று (01-08-25) தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று தீர்ப்பளித்து தண்டனை விவரத்தை நாளை (02-08-25) அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வெளியான பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய ரேவண்ணா, விரக்தியடைந்து அழுதபடி காணப்பட்டார். 

court karnataka Prajwal Revanna verdict obscene
இதையும் படியுங்கள்
Subscribe